இந்திய விண்வெளி ஆய்வு பயணத்தின் முக்கிய நிகழ்வாக சந்திராயன் - 2 விண்கலம் நாளை மறுநாள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த விண்கலத்தில் உள்ள லேண்டர், ரோவர் ஆகியவற்றின் ஓடுதிறன் நிலவில் முழுமையாக இருக்க வேண்டும். அதன் முன்னோட்டத்திற்காக நிலவில் உள்ள தரைப் பரப்பைப் போன்ற இடத்தை தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி, குன்ன மலைக் கிராம மலைப்பகுதிகளில் 'லூனார் சாயில்' இருப்பதாகக் கண்டறிந்தனர். பின்னர் அங்கிருந்து பாறைகளை வெட்டி பெங்களூருக்கு அனுப்பி ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வுக் குழுவில் சேலம் பெரியார் பல்கலைக்கழக புவியியல் தகவல் மைய இயக்குநர் பேராசிரியர் அன்பழகன் இடம் பெற்றார். இந்த ஆய்வு குறித்து ஈடிவி பாரத் செய்திக்காக பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "சந்திராயன்-2 லேண்டர், ரோவர் ஆகியவற்றின் ஓடுதிறன் குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் முடிவு செய்தது. ஏற்கனவே நாங்கள் நிலவின் மேற்பரப்பில் உள்ள மண் வகையில் தன்மையை ஆய்வு செய்து வருகிறோம் என்பதை இந்திய விஞ்ஞானிகள் அறிந்து வைத்திருந்தனர்.
அவர்கள் எங்களை நாடியதும் எங்களிடம் உள்ள ஆய்வு முடிவுகளின்படி நாமக்கல் மாவட்டம் சித்தம் பூண்டி, குன்னமலைப் மலைப்பகுதிகளில் நிலவின் தரை பரப்பில் உள்ள 'அனார்த்த சைட்' பாறை வகைகள் இருப்பதைத் தெரிவித்தோம். அந்தப் பாறை வகையை இஸ்ரோ விஞ்ஞானி வேணுகோபால் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தது. பின்னர் அந்த பாறை வகையைப் பயன்படுத்தி 50 டன் அளவிற்கு மாதிரிகள் சேகரித்து பெங்களூருவிற்கு அனுப்பினோம்.
அங்கு உள்ள ஆய்வு படுகையில் இந்த அனார்த்தசைட் பாறை வகையை அமைத்து அதில் சந்திராயன்-2 லேண்ட் ரோவர் ஆகியவற்றின் ஓடுதிறனை வெற்றிகரமாகச் சோதித்து பரிசோதனையை இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் நிறைவு செய்தது. இதனையடுத்து நாளை மறுநாள் சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்பட உள்ளது" என்று தெரிவித்தார்.