புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள கோயில்களில் விழாக்களின் போது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர்கள் நகைகளை கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தியதில், இளம்பெண் ஒருவர் இந்த நகைத் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பெண் காவலர் ஒருவர், அப்பெண் ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் இருப்பதாகக் கொடுத்த தகவலின் பேரில், அவரிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பதில் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து அவரை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தபோது, சிசிடிவி காட்சிகளில் இருப்பது தான் என்று அப்பெண் காவல் துறையினரிடம் ஒப்புக்கொண்டார்.
விசாரணையில், இவர் திருச்சியைச் சேர்ந்த புவனேஸ்வரி என்றும், கோயில் விழாக்கள், திருமண நிகழ்ச்சிகளுக்குச் சென்று நகைத் திருட்டில் ஈடுபடும்போது, நிறைய நகைகளை அணிந்து, பணக்காரர் போல் சென்று நகைத்திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.
மேலும், இவர் திருடப்பட்ட நகைகளை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றி உள்ளார். மேலும், விழாக்களின் போது திருடிய ஏழு லட்சம் மதிப்புள்ள தங்கச்சங்கிலியை உருக்கி, தங்கக் கட்டிகளாக வைத்திருந்தவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்து, புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: காதலி சொன்னதுபோல் வராத ஆத்திரம் - போலீஸ் பூத் மீது குண்டு வீசிய காதலன் கைது!