கரோனா லாக்டவுன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார முடக்கத்தை பொதுமக்கள் சமாளிக்க ரிசர்வ் வங்கி, வங்கிக் கடன் தவணை செலுத்த ஆறு (மார்ச் முதல் ஆகஸ்ட்வரை) மாத காலம் நீட்டித்து சலுகை வழங்கியது. அதேவேளை தவணைத் தொகையை பின்னர் செலுத்த வேண்டும், அதற்கு விலக்கு இல்லை எனவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்த தவணைத் தொகைக்கான வட்டியையும் வாடிக்கையாளர்கள் வங்கியில் செலுத்த வேண்டும் எனவும் கூறப்படுகிறது.
மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆறு மாத தவணைக் காலத்தில் வட்டித்தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, ஆறு மாத தவணை நீட்டிப்பு காலத்தில் வட்டித் தள்ளுபடியை மேற்கொள்ள முடியுமா என்பதை ஆராய நிபுணர் குழு ஒன்றை மத்திய நிதியமைச்சகம் நியமித்துள்ளது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை இன்று(செப்.28) மீண்டும் வந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்விடம் இது குறித்து தனது பதிலை அளித்த மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா, அரசு இந்த விவகாரத்தை தீவிரமாக பரிசீலித்துவருகிறது எனவும் இது தொடர்பான முடிவை இன்னும் இரண்டு மூன்று நாட்களில் எடுக்கப்படும் எனவும் கூறினார். துஷார் மேத்தாவின் இந்த பதிலை பதிவு செய்துகொண்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
வழக்கு விசாரணை மீண்டும் அக்டோபர் 5ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கோவிட்-19 எதிரொலி : நிறுவனங்களை பாதுகாக்க திவால் சட்டம் மேலும் 3 மாதங்களுக்கு ரத்து