கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 17ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைகிறது. ஊரடங்கு முடிந்தவுடன் நோயைக் கட்டுக்குள் கொண்டுவரவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் எம்மாதிரியான திட்டங்களை வகுத்துள்ளீர்கள் என பல்வேறு தரப்பினர் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
இந்நிலையில், வீடியோ கான்பரன்சிங் மூலம் பத்திரிகையாளர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி, அதிகார பரவலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "கரோனாவுக்கு எதிரான போரில் அரசு வெளிப்படையாக இருக்க வேண்டும். முடிவு எடுக்கும்போது மாநிலங்களுக்கு ஒத்துழைப்பை நல்க வேண்டும்.
ஆன் செய்துவிட்டு ஆஃப் செய்ய ஊரடங்கு ஒன்றும் பட்டன் கிடையாது. இம்மாதிரியான காலத்தில் மத்திய, மாநில அரசுகள், மாவட்ட மாஜிஸ்ட்ரேட், இந்திய மக்கள் என அனைவரிடமும் ஒத்துழைப்பு தேவை. அதிகார பரவலை மேற்கொண்டு மாநில, மாவட்ட மாஜிஸ்ட்ரேட்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
கரோனாவுக்கு எதிரான போரை பிரதமர் அலுவலகத்திலிருந்து தொடுத்தால் தோல்விதான் மிஞ்சும். அதிகாரம் ஒரு இடத்தில் குவிந்தால் பேரழிவு ஏற்படும். முதலமைச்சர்கள் மீது பிரதமர் நம்பிக்கை வைக்க வேண்டும். மாவட்ட மாஜிஸ்ட்ரேட்கள் மீது முதலமைச்சர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: கரோனாவுக்கு எதிரான போர் என்பது ஜனநாயக கடமை!