போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்த பலரின் முயற்சிகளுக்கும், கரோனா பரவலானது, மனதளவிலும் செயலளவிலும் இந்த ஆண்டு பெரும் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது.
அந்த வகையில், யுபிஎஸ்சி எனப்படும் மத்தியப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் பங்குபெறும் தேர்வர்களின் பயிற்சிகளிலும் தொய்வை ஏற்படுத்தி, தற்போதைய கரோனா சூழல் அவர்களை பெருமளவு பாதித்துள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டுடன் தங்களது உச்ச வயதுவரம்பை எட்டும் யுபிஎஸ்சி தேர்வர்கள், கரோனா பரவலின் காரணமாக தங்களது பயிற்சிமுறைகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகளை முன்வைத்து, தாங்கள் அடுத்து ஆண்டும் தேர்வுகளில் பங்குபெற தங்களுக்கு கூடுதல் வாய்ப்பு ஒன்றை வழங்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தை முன்னதாக நாடி இருந்தனர்.
இந்நிலையில், நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு, இது குறித்த 24 யுபிஎஸ்சி தேர்வர்களின் மனுக்களை தள்ளுபடி செய்ததோடு, இது தொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. அதே நேரம் தேர்வர்களுக்கு மத்திய அரசின் முடிவில் திருப்தி ஏற்படாவிட்டால் மீண்டும் அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.