உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸில் இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக எழுந்துள்ளன.
இந்நிலையில், பெண்களின் பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
பெண்கள் குறித்த புகார்களுக்கு எதிராக உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் பெறப்படும் காவல் நிலைய எல்லைக்கு வெளியே குற்றம் நடைபெற்றிருந்தால், ’ஜீரோ எப்.ஐ.ஆர்’ பதிவு செய்யப்படவேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், சட்டங்கள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் அவற்றை செயல்படுத்தும் காவல் துறை அலுவலர்கள் முறையாக செயல்பட வேண்டும் என்றும், சட்டங்களை முறையாக அமல்படுத்த தவறும் காவல் துறை அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.