தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி கரோனா வைரஸ் பெருந்தொற்றால் புதிதாக ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், டெல்லியில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கரோனாவுக்கு எதிரான போரில் அயராது பணியாற்றிவரும் மருத்துவ பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோருக்கு கரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
அரசு அலுவலகங்களில் கட்டாயமாக கரோனா பரிசோதனை செய்யவேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதுகுறித்து சத்யேந்தர் ஜெயின் கூறுகையில், "இந்த சோதனைகளை மேற்கொள்ள மத்திய அரசு ஒரு நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது. அதன்படி அதிகளவில் கரோனா பரிசோதனை செய்ய ரேபிட் டெஸ்ட் கருவிதான் ஒரே வழி. ஆனால் இதை பயன்படுத்த மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை.
மேலும் ஆர்.டி - பி சிஆர் டெஸ்ட் சோதனையில் பல சிக்கல்கள் உள்ளன. இந்த சோதனையைச் செய்துகொள்ள யாரும் முன்வருவதில்லை. டெல்லியில் கரோனா வைரஸின் இரட்டிப்பாகும் விகிதம் 11-12 நாள்களாக உள்ளன. இந்த விகிதம் 20 அல்லது அதற்கு மேற்பட்ட நாள்களாக இருந்தால் எங்களுக்கு ஆறுதலாக இருக்கும்" என்றார்.
முன்னதாக கரோனா பாதிப்பு பரிசோதனைக்காக சீனாவிலிருந்து வாங்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கருவிகளின் முடிவுகளில் குழப்பம் ஏற்பட்டதால் அதை உடனடியாக திருப்பி அனுப்புமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கரோனாவுக்கு எதிரான போரில் சவால்விடுக்கும் காரணிகள் யாவை?