டெல்லி: கடந்த 13 நாட்களில் தமிழ்நாடு உடன் சேர்த்து, 6 மாநிலங்களில் 21 விழுக்காடு அளவே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.
மகாராஷ்டிராவில் 20.7 விழுக்காடு தடுப்பூசிகளும், சத்தீஸ்கரில் 20.6 விழுக்காடு, உத்தரகாண்ட்டில் 17.1 விழுக்காடும், தமிழ்நாட்டில் 15.7 விழுக்காடும், டெல்லியில் 15.7 விழுக்காடும், ஜார்க்கண்டில் 14.7 விழுக்காடு தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூசன் தெரிவித்துள்ளார். அதில் பெரிய மாநிலங்கள் தடுப்பூசி இடும் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, லட்சத்தீவில் 83.4%, ஒடிஸாவில் 50.7%, ஹரியானாவில் 50.0%, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் 48.3%, ராஜஸ்தான் 46.8%, திரிபுராவில் 45.6%, மிசோரம் 40.5%, தெலங்கானாவில் 40.3%, ஆந்திராவில் 38.1%, கர்நாடகாவில் 35.6%, மத்தியப்பிரதேசத்தில் 35.5% அளவு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் கரோனா தாக்கம் அதிகரித்து வருவதாகத் தெரிவித்திருக்கும் சுகாதாரத் துறை அமைச்சகம், குறைவாகத் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் மாநிலங்கள், அதன் பணியைத் தீவிரப்படுத்த அறிவுறுத்தியுள்ளது.