வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, ஆந்திராவில் பலத்த மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் பல்வேறு பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. மீட்புப் பணிகளில் ஏற்கனவே தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டிருக்கும் நிலையில், தற்போது ராணுவத்தினரும் களமிறங்கியுள்ளனர்.
வெள்ள பாதிப்பு குறித்து ஆராய மத்திய அமைச்சரவைக் குழு ஆந்திராவிற்கு வர வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு விடுத்திருந்தார். மேலும், உடனடி நிவாரண நிதியாக ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், ஜெகன் மோகன் ரெட்டியின் அழைப்பை ஏற்று மத்திய அமைச்சரவைக் குழு ஆந்திராவிற்கு சென்று வெள்ள பாதிப்பு குறித்து ஆராயவுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவு அலுவலர்கள், நிதியமைச்சகத்தின் அலுவலர்கள், நீர்வளத்துறை அமைச்சகத்தின் அலுவலர்கள் ஆகியோர் கொண்ட குழு இந்த மாத இறுதியில் ஆந்திராவிற்கு செல்ல உள்ளது.
வெள்ள பாதிப்பு தீவிரமாக உள்ளதா இல்லையா என்பது குறித்து ஆராய்ந்து உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது.