கேரளாவில் கனமழை பெய்து பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. அங்கு பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதால் இரண்டு லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களை பாதுகாப்புப் படையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில், கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை வயநாடு எம்.பி. ராகுல் காந்தி நேற்று பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறுகையில், "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் சோகம் சூழ்ந்தபோதிலும், மாநில மக்கள் மிகச் சரியாக நடந்துகொண்டுள்ளனர். இழப்பீடு வழங்குவதுதான் இங்கு பிரச்னையாக உள்ளது. பொதுமக்கள் ஏராளமானோர் வீடுகள், விவசாய நிலங்களை இழந்துள்ளனர். ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் உள்ள மக்களை பற்றி மத்திய அரசு கவலைப்படுவதில்லை" என்றார்.