லடாக்கில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை தொடர்ந்து கொண்டிருக்கிறது. லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில், கடந்த ஜூன் மாதம் இந்திய வீரர்களுக்கும் சீன துருப்புகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதலால் இருநாடுகளுக்கும் இடையே போர் ஏற்படும் சூழல் நிலவிவந்தது.
இந்நிலையில் இன்று, லடாக் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் முப்படைத் தளபதி பிபின் ராவத் திடீரென ஆய்வுமேற்கொண்டார். அப்போது, எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பது குறித்து உயர் அலுவலர்கள் எடுத்துரைத்தனர். பின்னர், அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய பகுதிகளில் உள்ள விமான தளங்களைப் பார்வையிட்டார்.
முன்னதாக, ஜனவரி மூன்றாம் தேதி, முப்படைத் தளபதி பிபின் ராவத், அருணாச்சலப் பிரதேசத்தில் சுபன்சிரி பள்ளத்தாக்கில் பணியமர்த்தப்பட்டுள்ள ராணுவ வீரர்கள், இந்தோ-திபெத்திய எல்லைப் படை (ஐ.டி.பி.பி.) வீரர்களைப் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.