ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, சிபிஐ அலுவலர்கள் அவரிடம் விசாரணை செய்ய நேற்று இரவு 12 மணியளவில் அவர் வீட்டிற்கு சென்றுள்ளனர். ப.சிதம்பரம் வீட்டில் இல்லாததால், அவரை இரண்டு மணி நேரத்திற்குள் ஆஜராகும்படி வீட்டில் நோட்டீஸை ஒட்டிவிட்டுச் சென்றனர்.
அதற்கிடையில் ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர் குழு உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுவிற்கு மேல்முறையீடு செய்தது.
அதைத் தொடர்ந்து இன்று அதிகாலை இரண்டாவது முறை 4.05 மணிக்கு சிபிஐ அலுவலர்கள் குழு அவரைத் தேடி மீண்டும் வந்தனர். அவர் வீட்டிற்கு வராததை தெரிந்து கொண்டு திரும்பிச் சென்றனர். தொடர்ந்து காலை 8.30 மணிக்கு முன்றாவது முறையாக வந்து நோட்டமிட்டு சென்றனர். தற்போது நான்காவது முறையாக அவர் வீட்டில் முகாமிட்டுள்ளனர்.
இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர், இந்நிலையில் இது குறித்து உத்தரப் பிரதேச கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்வீட்டரில்,
"மிகவும் திறமையான, மதிக்கத்தக்க மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம், இந்த நாட்டுக்கு உண்மையாக பல தசாப்தத்திற்கு மேலாக உழைத்துவந்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் நிதித்துறை, உள்துறை உள்ளிட்ட பொறுப்புகளில் பணியாற்றினார்.
கொஞ்சம் கூட தயங்காமல் பாஜக அரசின் குறைப்பாடுகளை வெட்ட வெளிச்சமாக பேசிவந்தார். அது அவர்களுக்கு சிரமமாக இருந்ததால், அவரை வீழ்த்துவதற்கு மிகவும் கேவலமாக பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது. இதனால் என்ன நடந்தாலும் நாங்கள் அவருக்கு உறுதுணையாக இருப்போம்" என ட்வீட் செய்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், ப.சிதம்பரத்தை வீழ்த்தும் நோக்கில் பாஜக செயல்பட்டுவருகிறது என்று உத்தரப் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.