காவிரி நதிக்கு புத்துயிர் அளிக்கவும், விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கிலும் ஈஷா யோகா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், 'காவிரி கூக்குரல்'என்ற இயக்கத்தை உருவாக்கியுள்ளார்.
காவிரி வடிநிலப் பகுதியில் விவசாயிகள் மூலம் 242 கோடி மரங்களை நடுவதே இந்த இயக்கத்தின் திட்டமாகும். இதற்கு நிதி திரட்டுவதற்காக ஜக்கி வாசுதேவ் இந்தியா முழுவதும் பயணித்து வருகின்றார்.
இதனிடையே, இவரது முயற்சியைப் பாராட்டும் வண்ணம் சில நாட்களுக்கு முன்பு பிரபல ஹாலிவுட் பட நாயகனும், பருவநிலை மாற்ற ஆர்வலருமான லியோனார்டோ டிகாப்ரியோ தனது ஃபேஸ்புக் பக்கத்தில் காவிரி கூக்குரலை ஆதரித்து பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : வேளாண் காடுகள் பாதுகாப்பு - ஜக்கி வாசுதேவ் பரப்புரை
இந்நிலையில், காவிரி கூக்குரலுக்கு டிகாப்ரியோ அளித்துவரும் ஆதரவைத் திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தி, டிகாப்ரியோவுக்கு பல்வேறு தன்னார்வ அமைப்புகள் கடிதம் எழுதியுள்ளனர்.
காவிரி கூக்குரல் இயக்கத்தின் திட்டம் உண்மைக்கு முரணாக உள்ளது என்றும், காவிரி நதிப்படுகையில் மரங்கள் நடுவதினால் மட்டும் அந்த நதியை மீட்டெடுக்க முடியாது என்றும் அந்தக் கடிதத்தில் விளக்கியுள்ளனர்.
Environment Support Group என்ற சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த லியோ சல்பான்ஹா எழுதியிருந்த கடிதத்தில், "...அதீத அளவில் மரங்களை நடும் செயல் சுற்றுல்சூழல் மற்றும் சமூகத்திற்குப் பாதகமாக விளைவுகளை உருவாக்கும்" எனத் தெரிவித்துள்ளாராம். மேலும், காவிரி கூக்குரலுக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள பொது நல வழக்கையும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.