அடுத்தாண்டு மேற்குவங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. மாநிலத்தை கைப்பற்ற வேண்டும் என பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. அந்த வகையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மேற்குவங்கம் சென்றிருந்தார். அப்போது, அவரின் வாகனம் உள்பட பாஜகவின் முக்கிய தலைவர்களின் கார் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு குறித்து நேரில் வந்து விளக்கம் அளிக்கும்படி தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியது. ஆனால், அவர்களை அனுப்ப மேற்கு வங்க அரசு மறுப்பு தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து, சம்பவம் நடைபெறும்போது அங்கு பொறுப்பிலிருந்த எஸ்பி போலாநாத் பாண்டே, எடிஜி ராஜீவ் மிஸ்ரா, டிஐஜி பிரவீன் குமார் திரிபாதி ஆகியோர் மத்திய அரசு பணிக்காக அழைக்கப்பட்டனர். பாதுகாப்பு குளறுபடிகள் காரணமாக அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியான நிலையில், மேற்குவங்க அரசு அவர்களை அனுப்ப மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அலுவலர் ஒருவர் கூறுகையில், "மத்திய அரசு பணிகளுக்காக மூன்று ஐபிஎஸ் அனுவலர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், உள்துறை அமைச்சகத்திடம் அவர்களை அனுப்ப மேற்கு வங்க அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது" என்றார்.