பாகிஸ்தான் நாட்டில் பிறந்தவர் உலகப் புகழ்பெற்ற கவிஞர் ஃபயஸ் அகமது. இவரது கவிதைகளில் இந்து விரோத கருத்துகள் உள்ளனவா? என்பது குறித்து ஆராய கான்பூர் ஐஐடி கல்வி நிறுவனத்தின் சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய புகழ்பெற்ற பாலிவுட் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், "ஃபயஸ் அகமதை இந்துவிரோதி என்று அழைப்பதே அபத்தமானது; நகைப்புக்குரியது. இதுகுறித்தெல்லாம் கருத்து கூறவது கடினம். முகமது ஜியா-உல்-ஹக் பாகிஸ்தான் அதிபராக இருந்தபோது, ஃபயஸ் அகமது பாகிஸ்தான் அரசுக்கு எதிராகவும் கவிதைகளை இயற்றியுள்ளார். ஃபயஸ் அகமது தனது வாழ்வில் பெரும்பாலான பகுதியை பாகிஸ்தானுக்கு வெளியிலேயே கழித்துள்ளார். அப்போது அவரை, பாகிஸ்தான் விரோதி என்றே அழைத்தனர்.
மேலும், இஸ்லாம் மதக் கோட்பாடுகளில் இல்லாத 'படைப்பும் படைத்தவனும் ஒன்றே' என்ற கருத்தையும், அவர் தனது கவிதையில் வெளிப்படுத்தியுள்ளார்" என்றார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜாமியா பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது, இவரது கவிதைகளைப் போராட்டக்காரர்கள் பாடியதாகவும் இது மற்றவர்கள் மனம் புண்படும் வகையிலிருந்ததாகவும் சில பேராசிரியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், அவரது கவிதைகளை ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இனி குறைந்த விலையில் அதிக சேனல்கள் பார்க்கலாம் - ட்ராய் அதிரடி அறிவிப்பு