இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை பரப்பி வருபவர்களை கண்டறிய காவல் துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் நாட்டு மக்கள் யாரும் வதந்திகளுக்கு செவி சாய்க்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற வன்முறையில் ஐந்து பேர் உயிரிழந்ததாக குறிப்பிட்ட யோகி ஆதித்யநாத், போராட்டத்தைத் தூண்டிவிடும் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சித் தலைவர்களின் செயல் துரதிருஷ்டவசமானது என்று விமர்சித்துள்ளார்.
மேலும் பஹ்ரைச், பரெய்லி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையினரிடம் மோதலில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்றும் சாம்பல் பகுதியில் அரசுப் பேருந்துக்கு தீ வைத்த விவகாரத்தில் சமாஜ்வாதி கட்சி எம்பி உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் கூறியுள்ளார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தல்களிலிருந்து இந்தியா வரும் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர், ஜெயின் உள்ளிட்ட மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை திருத்தச் சட்டம் வழிவகைச் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.