சண்டிகர் : கரோனா பரவல், ஊரடங்கு காரணமாக ஓமன் நாட்டிற்கு சென்று தாயகம் வரமுடியாமல் அந்நாட்டில் சிக்கியுள்ள 24 இந்திய பெண்களை மத்திய வெளியுவுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தாயகம் அழைத்து வர வேண்டும் என பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் காங்கிரஸ் எம்.பி. குர்ஜித் சிங் அவுஜ்லா வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த 24 பெண்கள் பணி பெண்களாக ஓமன் நாட்டிற்கு பணியாற்றச் சென்றதாகவும், கரோனா பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் சிக்கிக்கொண்ட அவர்களுக்கு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் எந்த உதவியும் செய்யவில்லை என காங்கிரஸ் எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து கடந்த ஜூன், அக்டோபர் மாதங்களில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு, தான் கடிதம் எழுதியதாகவும், ஆனால் தனக்கு எந்த பதிலும் வரவில்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், " ஓமன் நாட்டில் சிக்கியுள்ள 24 பெண்களை மீட்க வேண்டும் என மிகுந்த வேதனையுடன் மீண்டும் கடிதம் எழுதியுள்ளேன். இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என அப்பெண்களுக்கு உறுதியளித்திருந்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால் டெல்லியில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளேன்" என்றார்.
இதையும் படிங்க: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: விவசாயிகளை ஒடுக்க 144 தடை உத்தரவு!