இந்தியாவின் 17-ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தேதி தொடங்கி மே 19ஆம் தேதிவரை என மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 23-ஆம் தேதி நடக்க இருக்கிறது.
தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கை வெளியிடுவது, தேர்தல் பரப்புரை என தேர்தல் வேலைகளில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாகியுள்ளன. காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து பாஜகவின் தேர்தல் அறிக்கை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்திருந்தது. மேலும், இதுவரை அக்கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிடாதது குறித்து விமர்சனமும் வைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகும் என பாஜக மூத்த தலைவரும், நிதியமைச்சருமான அருண்ஜெட்லி தெரிவித்தார்.
அதன்படி பாஜகவின் தேர்தல் அறிக்கை காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி, அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் வெளியாகவுள்ளது.