புதுச்சேரி பிரதேசத்தின் காரைக்கால் அடுத்த நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த ஐந்து மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. அதனால், அவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று (ஆகஸ்ட் 12) கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவாக காரைக்கால் பாஜக சார்பில் மாவட்டத் தலைவர் துரை சேனாதிபதி தலைமையில் நெடுங்காடு கடைவீதியில் 50க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்தும், நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஐந்து மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், ஊழியர்களுக்கு போர்க்கால அடிப்படையில் ஊதியம் வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டன கோஷம் எழுப்பினார். இதையடுத்து, நெடுங்காடு கொம்பின் பஞ்சாயத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு நேரில் சென்று பாஜகவினர் ஆதரவும் தெரிவித்தனர்.