ரஃபேல் விவகாரத்தில் 'காவலாளியே திருடன்' எனப் பிரதமர் மோடியை உச்ச நீதிமன்றமே சொன்னதாக காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி பரப்புரையின்போது தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் தாம் சொல்லாததை சொன்னதாக பரப்புரை மேற்கொண்ட ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது.
அதன்படி, ராகுல் காந்தியும் உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினார். இந்நிலையில், ரஃபேல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் மத்திய அரசு முறைகேட்டில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் ஏதும் இல்லை எனக் கூறி வழக்கை முடித்துவைத்தது.
இந்தத் தீர்ப்பு பாஜகவுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகவும் அக்கட்சி அங்கம் வகிக்கும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் நற்சான்று அளித்ததாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ரஃபேல் விவகாரத்தில் மோடியை திருடன் எனக் கூறிய ராகுல் உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினாலும் நாட்டிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தி பாஜக இன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகிறது.
இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பூபேந்தர் யாதவ் செய்தியாளர்களிடம், "ரஃபேல் விவகாரத்தில் மோடிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ராகுல் காந்தி பொய் கூறியதற்காக அவர் இந்த நாட்டிடம் மன்னிப்புக் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை" எனத் தெரிவித்திருந்தார்.