மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் வேலைகளில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாகியுள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து பாஜகவின் தேர்தல் அறிக்கை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்திருந்தது.
இந்நிலையில் இன்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் வாக்குறுதிகள் பின்வருமாறு:
- வேளாண்மை, ஊரக வளர்ச்சி சார்ந்து 25 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளுக்கு பாஜக தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது
- கிரெடிட் கார்டு மூலம் ஒரு லட்சம்வரை கடன் வாங்கும் ஏழை விவசாயிகளுக்கு 0% வட்டி
- தேச பாதுகாப்பில் பாஜக சமரசம் செய்யாது
- குடியுரிமை மசோதா, பொது சிவில் சட்டம் உள்ளிட்டவைகளை பாஜக கட்டாயம் அமல்படுத்தும்
- சிறு, குறு வியாபாரிகளுக்கு 60 வயதிற்கு மேல் ஓய்வூதியம் வழங்கப்படும்
- அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளும் மேம்படுத்தப்படும்
- தூய்மை இந்தியா திட்டத்தின் வழி, கழிவு மேலாண்மை மேற்கொள்ளப்படும்
- ஆயுஷ்மான் பாரத் மூலம் ஒன்றரை லட்ச இலவச சுகாதார மையங்கள் கட்டப்படும்
- அனைத்து பகுதிகளுக்கும் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் வங்கி சேவை கொண்டு செல்லப்படும்
- மகளிருக்கான 33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்படும்
- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டம் நீக்கப்படும்.
இவ்வாறு மொத்தம் 75 அம்ச தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. முன்னதாக பேசிய பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, ‘பாஜகவின் 75 வாக்குறுதிகளும் இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படும் 2022 ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும்’ என்றார்.
இதனையடுத்து பேசிய பிரதமர் மோடி,
- ஆளும் பாஜக அரசின் திட்டங்களுக்கு எல்லாம் என்னுடைய அமைச்சரவை குழு தான் காரணம்.
- தேசியவாதம், கடைக்கோடி மக்களின் நலன், நல்ல நிர்வாகம் என்ற மூன்று அம்சங்களை மையமாக வைத்து தான் இந்த தேர்தல் அறிக்கை தயாராகியுள்ளது.
- நீர்மேலாண்மையாக புதிய அமைச்சகம் கொண்டுவரப்படும். இதன் மூலம் நீர் மறுசுழற்சி செய்தல், நீர் பற்றாக்குறை தடுத்தல் போன்றவை செயல்ப்படுத்தப்படும்.
- மீனவளத்துறைக்கும் தனி அமைச்சகம் கொண்டுவரப்படும்.
- இந்திய மக்கள் இலவசமாக எது கொடுத்தாலும், வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள் என்பதை மாற்றும் விதமாக மானிய விலையில் கேஸ் வாங்குவது உள்ளிட்டவற்றை தாமாக முன்வந்து மக்கள் வேண்டாம் என்றுள்ளனர்.
- 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடுகள் பட்டியலுக்கு சென்றுவிடும். இதற்கான அடித்தளம் 2019 லிருந்து 2022க்குள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.