பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்தில் போட்டியிடும் கட்சித் தலைவர்கள் குறித்த அறிக்கை ஒன்றை ஜனநாயக சீர்திருத்த சங்கம் (Association of Democratic Reforms) வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, 2015ஆம் ஆண்டு பிகார் சட்டப்பேரவைத் தேர்தலின்போது வேட்பாளர்களால் தாக்கல்செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்ற வழக்குகள்:
இந்த அறிக்கையின்படி, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.) கட்சி அதிக கறைபடிந்த தலைவர்களைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து, காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் உள்ளன.
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 41 சதவிகித தலைவர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. காங்கிரசில் 40 சதவிகித தலைவர்கள் மீதும், ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு.), பாஜக ஆகிய கட்சிகளில் முறையே 37, 35 சதவிகித தலைவர்கள் மீதும் குற்ற வழக்குகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீது கொலை குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், 30 பேர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து பேர் மீது பெண்கள் மீதான வன்கொடுமை தொடர்பான பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், ஒரு எம்எல்ஏ மீது பாலியல் வன்முறை வழக்கு பதியப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்து மதிப்பு
அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 240 எம்எல்ஏக்களில் 67 சதவிகிதம் பேர் மில்லியனர்கள். இவர்களில் ககாரியாவைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏ 41 கோடி சொத்து மதிப்புடன் முதலிடம் வகிக்கிறார். பாகல்பூரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ அஜித் சர்மா 40 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
கல்வித்தகுதி
மேலும் இந்த அறிக்கையின்படி, மொத்தமுள்ள 240 எம்எல்ஏக்களில் 134 பேர் பட்டதாரிகள் எனவும், 96 பேர் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் எனவும், ஒன்பது எம்எல்ஏக்கள் கல்வியறிவு பெற்றவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : லாலுவின் அரசியல் ஆட்டம் இனிதான் தொடங்கவுள்ளது!