கடந்த ஜனவரி மாதம் உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியான பாஜகவின் தேசியத் தலைவராக ஜே.பி. நட்டா பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து, கட்சியின் நலனுக்காக பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்துவருகின்றார். இந்நிலையில், 11 மாவட்டத்தில் கட்சி அலுவலகங்களைக் காணொலி கலந்தாய்வின் மூலம் இன்று தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அவர், "பிரதமர் நரேந்திர மோடியின் ஆசிர்வாதங்களைப் பெற்ற மாநிலம் பிகார். ஏனென்றால் கோடிக்கணக்கில் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை பிகாருக்கு அவர் செய்துள்ளார். முதலமைச்சர் நிதிஷ் குமார் இந்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கட்சிக்காக வேலை செய்பவர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு விளக்க வேண்டும்" என்றார்.
"மோடி அரசின் முடிவுகள் குறித்து தவறான பரப்புரைகள் பரவுகின்றன. இது குறித்து கட்சிக்காரர்கள் மக்களுக்கு சரியான விளக்கத்தைக் கொடுக்க வேண்டும். 370, 35 (ஏ) சட்டப்பிரிவு தொடர்பான மசோதா, முத்தலாக் மசோதா போன்றவற்றில் அரசின் நிலைப்பாடுகளை எடுத்துரைக்க வேண்டும். முத்தலாக் தண்டனைக்குரிய குற்றம் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
ஜம்மு காஷ்மீரில் அமல்படுத்திய தீர்க்கமான சட்டத்தினால் அங்கு வசிப்பவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள். முத்தலாக் முறையினால் பாதிக்கப்படும் பெண்களின் உரிமையை அந்த மசோதா பெற்றுக் கொடுத்துள்ளது" எனக் கட்சியின் நிலைப்பாடுகளை எடுத்துரைத்தார்.
தொடர்ந்து பேசிய நட்டா, “பாஜக என்பதை 'வளர்ச்சிக்கு நிகரான பொருள்' எனக் கொள்ள வேண்டும். எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். அரசியல் என்பது சீரிய முழுநேர வேலை. இதற்கு நுழைவுவாயில் உண்டு. ஆனால், வெளியேறும் வழியில்லை.
குறிப்பாக, தனிமனித நன்மைகளைப் பற்றி மட்டும் யோசிக்காதீர்கள். கட்சியின் நலன் குறித்து நினைவில் கொள்ளுங்கள். கட்சி பலனடைவது அனைவருக்கான பலனாக இருக்கும்” என்றார்.
இதையும் படிங்க: பழங்குடியினர் போல் கடற்கரையை பாதுகாக்க வேண்டும் - புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர்