பாட்னா: பா.ஜ., எம்.பி., ஜனார்தன் சிங் சிக்ரிவால் பிகாரில் ஏற்பட்ட வெள்ள சேதத்தை மதிப்பிடுவதற்குச் சென்றபோது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்மேல் தாக்குதல் நடத்தியுள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகாராஜ்கஞ்சைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜனார்தன் சிங் சிக்ரிவால் பிகாரில் லக்ரி நபிகாப்ஜுபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வருகை தந்தபோது குடியிருப்பாளர்கள் வன்முறை போராட்டத்தை நடத்தினர்.
இந்நிலையில், கோபமடைந்த கிராமவாசிகள் சிக்ரிவாலைத் தாக்கி நாற்காலிகளை வீசினர். அவருடன் அங்கு வந்தவர்களும் தாக்கப்பட்டனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எம்.பி. ஒரு சம்பிரதாயத்திற்காக வருகை தந்துள்ளார், இந்த கடினமான காலங்களில் அரசியல் தலைவர்கள் யாரும் எங்களுக்கு உதவிக்கு வரவில்லை எனவும் சில கிராமவாசிகள் சிக்ரிவாலை உதவிக்காக அணுகியபோது அவரிடமிருந்து ஒரு உதவியும் கிடைக்கவில்லை என உள்ளூர் மக்கள் கூறினர்.
ஞாயிற்றுக்கிழமை பிகாரில் வெள்ள பாதிப்பு உயர்ந்து, பாதிக்கப்பட்டிருந்தவர்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்திலிருந்து 74 லட்சமாக அதிகரித்தது. அங்கு வெள்ளத்தில் இருபத்தி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
16 மாவட்டங்களில் 125 தொகுதிகளில் 1,232 பஞ்சாயத்து பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும், தர்பங்கா வெள்ளத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
முசாபர்பூரில் ஆறு பேரும், மேற்கு சாம்பாரனில் நான்கு பெரும், சரண் மற்றும் சிவான் மாவட்டங்களில் தலா இரண்டு பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.