அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்ற வரலாறு படைத்தார். இதனைத் தொடர்ந்து, அமைச்சரவை சகாக்களை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர், இன பாகுபாடு பார்க்காமல் பொறுப்பு வழங்கிவருகிறார்.
முன்னதாக, சுகாதாரத்துறை அமைச்சராக லத்தின் அமெரிக்கரான சேவியர் பெக்கெராவை தேர்வு செய்தார்.
இந்நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சராக ஓய்வுபெற்ற ராணுவ தளபதி லாயிட் ஆஸ்டினை தேர்வு செய்துள்ளார்.
இதுகுறித்து பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்போதைய சூழலில், சவால்கள், சிக்கல்களை எதிர்கொள்வதில் ஆஸ்டினுக்கு தனித்துவமான தகுதி உள்ளது.
உலகளாவிய அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு நட்பு நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதற்கும் ராணுவத்தை முன்னின்று கண்ணியமாக நடத்துவதற்கும் ஆஸ்டின் போன்ற நம்பகத்தன்மையான நபர் தேவை.
எனவே, அவருடன் ஒருங்கிணைந்து பணியாற்ற எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறேன். அமெரிக்க மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு செனட் சபை ஒப்புதல் வழங்கும் பட்சத்தில், அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்கும் முதல் கறுப்பினத்தவர் ஆஸ்டின் ஆவார்.
முன்னதாக, இதுகுறித்து ஆஸ்டினிடம் பைடன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இத்தேர்வின் மூலம் பைடன் அமைச்சரவையில் ஆஸ்டின் மிக முக்கிய பங்காற்றவுள்ளார். அமெரிக்காவின் மிகப் பெரிய அரசு அமைப்பாக திகழும் பாதுகாப்புத்துறை அமைச்சகம்தான், பல்வேறு நாடுகளில் இருக்கும் அமெரிக்க படைகளை கட்டுபாட்டுக்குள் வைத்துள்ளது. பென்டகன் செயல்பாடுகளையும் கண்காணித்துவருகிறது.