நாடு முழுவதும் கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் பெரும்பாலும் வீடுகளிலேயே முடங்கினர். இந்நிலையில், தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஷ்வரிலுள்ள அனைத்து பொது பூங்காக்களையும் பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய ஏதுவாக திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வாரத்தில் ஐந்து நாள்கள் காலை 5 மணி முதல் 10 மணிவரையும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் பூங்கா திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் காலை 5 மணி முதல் 7 மணிவரை இரண்டு மணி நேரம் மூத்த குடிமகன்கள் மட்டும் பூங்காவில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் புவனேஷ்வர் மாநகாரட்சி அறிவித்துள்ளது.
கரோனோ தொற்றால் வயதானவர்கள் உயிரிழக்கும் அபாயம் அதிகம் என்பதால் அவர்களுக்கென பிரத்யேகமாக இரண்டு மணி நேரத்தை மாநகராட்சி நிர்வாகம் ஒதுக்கியுள்ளது. புவனேஷ்வர் மாநகாரட்சியின் இந்த நடவடிக்கையை பலரும் பராட்டிவருகின்றனர்.
முன்னதாக,வரும் ஜூன் 30ஆம் தேதிவரை மூத்த குடிமகன்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று ஒடிசா மாநில அரசு அறிவுறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒடிசாவில் இதுவரை 965 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: பல ஆண்டுகால கோரிக்கையைப் பூர்த்திசெய்யும் ஒரு நாடு; ஒரு சந்தை!