கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் கலைநிகழ்ச்சி ஒன்று நடைபெற இருந்தது. அதில் கலந்துகொள்வதற்காக அந்த கல்லூரி மாணவ - மாணவிகள் பயிற்சி மேற்கொண்டுவந்தனர்.
அந்தவகையில், குறிப்பிட்ட சில மாணவிகள் ரேம்ப் வாக் நிகழ்ச்சிக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, மாணவிகள் ஒவ்வொருவராக அடுத்தடுத்து ஒத்திகை செய்து பார்த்தனர். அப்போது ஷாலினி (21) என்ற மாணவி திடீரென்று மயங்கி விழுந்தார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பிற மாணவ மாணவிகள், உடனடியாக மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஷாலினி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஷாலினிக்கு அருகில் இருந்த பிற மாணவிகள் கூறுகையில், திடீரென்று ஷாலினிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், அதனால்தான் அவர் மயங்கி விழுந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
கல்லூரி நிகழ்ச்சிக்காக பயிற்சி மேற்கொண்டிருந்த மாணவி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பிற மாணவ மாணவிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 5 வயது சிறுவனை காவு வாங்கிய காய்ச்சல்: டெங்குவா? மர்மமா?... அரசு மருத்துவமனையில் அலட்சியம்