மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தீவிர முயற்சியில் களமிறங்கியுள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசை எதிர்த்து தீவிர அரசியல் மேற்கொண்டுவரும் பாஜக, முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து வருகிறது.
இந்நிலையில், அம்மாநிலத்தில் பாஜக கவுன்சிலர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் கண்டன ஆர்பாட்டத்தை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது எனக் குற்றஞ்சாட்டினார். அப்போது, அதற்கு உதராணம் தெரிவிக்க அவர் கூறிய கருத்துதான் தற்போது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
”மேற்கு வங்கமும் மாஃபியாக்கள் ஆளும் உத்தரப் பிரதேசம், பிகார் போல மோசமடைந்து வருகிறது. காவல் நிலையம் முன்பே கவுன்சில் ஒருவர் சுட்டுக் கொல்லப்படுகிறார். இது வெட்கத்திற்குரிய நிலைமை“ என திலீப் கோஷ் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பிகாரில் முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தனது சொந்தக் கட்சி ஆளும் மாநிலங்களை மாஃபியாக்கள் ஆளும் மாநிலங்கள் என பாஜக மாநிலத் தலைவர் பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் முதலமைச்சர் வேட்பாளர் மோடி- பாஜக... அப்போ அதிமுக?