பாரத ரத்னா விருது பெற்றவரும், இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவருமான திரு. பிரணாப் முகர்ஜி, திங்கள்கிழமை தனது 84 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி-1 அமைச்சரவையில் அவரது முன்னாள் சகாவும், மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் வெளியுறவு துறை அமைச்சரும், எழுத்தாளருமான நட்வர் சிங் அவரை அன்புடன் நினைவு கூர்கையில், திரு. பிரணாப் முகர்ஜி இந்தியாவின் குடியரசு தலைவராகும் தனது முடிவை " மிகப்பெரிய தவறு " என்று கருதியதாக கூறினார்.
ஈடிவி பாரத் உடனான கே.நட்வார் சிங்கின் நேர்காணலின் தமிழாக்கம்
கே. நீங்கள் திரு. பிரணாப் முகர்ஜியுடன் பல ஆண்டுகளாக பணியாற்றியுள்ளீர்கள். அவரது அரசியல் பயணத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
தனது தலைமுறையின் மிகவும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகளில் அவரும் ஒருவர். பொதுவாக ஒருவர் தான் வைத்திருக்க விரும்பும் வெளியுறவு துறை, நிதி மற்றும் பாதுகாப்புத் துறை போன்ற மூன்று மிக முக்கியமான இலாகாக்களை அவர் வைத்திருந்தார். அவர் ஒரு சிறந்த பிரதமராக இருந்திருப்பார், ஆனால் அவர் ஏன் ஆகவில்லை என்பது குறித்து நான் ஏன் விரிவாகப் பேசப் போவதில்லை. டாக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் போன்ற சிறந்த குடியரசு தலைவர்களில் அவர் ஒருவராக இருந்தார்.
அவருக்கு அரசியலில் பரந்த அனுபவம் இருந்தது. கடினமான சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்பது அவருக்குத் தெரியும். அவர் ஒரு திறமையான, பலம் வாய்ந்த அமைச்சராக இருந்தார். அவர் பரவலாக அனைவராலும் மதிக்கப்பட்டார்.
அவர் அவ்வளவு திறமையானவராக இருந்தும், டாக்டர் மன்மோகன் சிங் பிரதமரானார், பிரணாப் முகர்ஜி அல்ல என்ற உண்மையை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜியின் கீழ் பணிபுரிந்தவர். பொதுவாக, இது போன்ற நிலையில் வேறு யாராக இருந்தாலும் ராஜினாமா செய்திருப்பார். ஆனால் பிரணாப் முகர்ஜி அவ்வாறு செய்யவில்லை, அவர் தேசத்தைப் பற்றி யோசித்தார், காங்கிரஸ் கட்சியைப் பற்றி சிந்தித்தார், தான் இணக்கமாக செயல்பட நிலைமையை சரிசெய்தார். அது தான் பிரணாப் முகர்ஜி.
கே. ஆனால், அவரே பிரதமராக விரும்பினாரா?
நிச்சயமாக. இது குறித்து எந்த சந்தேகமும் இல்லை. மேலும், அவர் ஏன் பிரதமராக ஆசைப்படக் கூடாது?
கே. நீங்கள் சொன்னது போல், அவர் காங்கிரஸ் கட்சியின் அனைத்து காலகட்டங்களின் நாயகனாக இருந்தவர். அவருடைய சேவைகள் பெரும்பாலும் நெருக்கடியான சமயங்களில் கட்சிக்கு தேவைப்பட்டது. பின்னர், அவர் ஏன் அமைச்சரவை, காங்கிரஸ் செயற்குழு, காங்கிரஸ் நாடாளுமன்ற குழு போன்றவற்றிலிருந்து நீக்கப்பட்டார்?
இது முற்றிலும் நியாயமற்றது. ஆனால் அவர் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் ஒரு மனிதர், பழிவாங்கும் நபர் அல்ல.
கே. அவருடன் உங்களுக்கு உள்ள பிடித்த நினைவுகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா?
நான் அவரை 6 மாதங்களுக்கு முன்பு சந்தித்தேன். தான் செய்த மிகப்பெரிய தவறு இந்தியாவின் குடியரசு தலைவராக முடிவு செய்ததுதான் என்று அவர் என்னிடம் கூறினார். ஏன் என்று அவரிடம் கேட்டேன். தான் ஒரு பொதுவான மனிதன் என்று கூறினார்.
“இங்கே நான் ஒரு பெரிய வீட்டில் இருக்கிறேன். நான் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன். இங்கே, வி.ஐ.பி.க்கள் அல்லாத பொதுமக்களை அல்லது எனது நண்பர்களை நான் சந்திக்க முடியாது. நான் இந்த பதவியை ஏற்கவில்லை என்றால் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்திருப்பேன்” என்று கூறினார்.
ஒவ்வொரு முறையும் தான் ஒவ்வொரு செயலை செய்வதற்கும் ஒரு நெறிமுறையைப் பின்பற்ற வேண்டியிருக்கிறது என்று கூறினார். “சில நேரங்களில், நானாக இருக்க விரும்புகிறேன். என்னை எப்போது வேண்டுமானாலும் அழைக்க கூடிய எனது நண்பர்களிடம் நான் பேச விரும்புகிறேன்” என்றும் கூறினார்.
கே. பிரணாப் முகர்ஜியின் குடும்பத்திற்கு நீங்கள் ஏதாவது செய்தி சொல்ல விரும்புகிறீர்களா?
அவரது வாழ்க்கை அவரது குடும்பத்தினருக்கு ஒரு உந்துசக்தியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏறக்குறைய 40 ஆண்டுகள் அரசியலில் சேவை செய்த இந்தியாவின் மிகச்சிறந்த குடியரசு தலைவரின் குடும்பம் என்பது அவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்.