உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்ததைத் தொடர்ந்து, ராம ஜென்ம பூமிக்கான அறக்கட்டளைகள் அமைக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணிகளைத் தொடக்கிவைப்பார் எனத் தெரிகிறது.
இந்நிலையில், அயோத்தியில் புதிய பள்ளிவாசல் கட்டுவதற்காக தன்னிபூர் கிராமத்தில் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த கட்டுமான பணிகளை முழுவீச்சில் செயல்படுத்த மாநில சன்னி மத்திய வக்ஃபு வாரியம், இந்தோ-இஸ்லாமிய கலாசார அறக்கட்டளையை உருவாக்கியது. இந்த வக்ஃபு வாரியத்தின் அறங்காவலரான ஜாபர் பாரூக்கி அறக்கட்டளையின் தலைவராகவும், அதர் உசேன் அறக்கட்டளையின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த அறக்கட்டளையில் ஒன்பது பேர் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர், பாபர் மசூதிக்கு ஈடாக வேறொரு நிலம் பெற முயன்றவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின் படி பள்ளிவாசல் கட்ட ஒதுக்கப்பட்ட ஐந்து ஏக்கர் நிலத்தில் பள்ளிவாசலைத் தவிர, அறக்கட்டளைக்காக ஒரு அலுவலக கட்டடம் கட்டப்படும் என வக்ஃபு வாரியம் அறிவித்துள்ளது. பள்ளிவாசல் தொடங்குவதற்கான கட்டுமான பணிகள் விரைவில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.