மகாராஷ்டிர வீட்டு வசதித் துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான ஜிதேந்திர அவாத், கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்றிற்கு அன்னாசிப்பழத்தில் வெடிபொருள் நிரப்பி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "தென்னிந்தியப் பகுதியான கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்றிற்கு அன்னாசிப் பழத்தில் வெடிபொருள் நிரப்பி, உணவளித்து கொல்லப்பட்ட சம்பவம் தனக்கு மிகுந்த கோபத்தையும், மீளாத் துயரத்தையும் அளித்துள்ளது.
நாங்கள் அனைவரும் கேரளாவை சமூகநீதி, சமத்துவத்தின் அடையாளமாகப் பார்க்கிறோம். உங்கள் தலைமையின்கீழ், இந்த நற்பண்புகள் அனைத்தும் மேலும் எவ்வாறு பலப்படுத்தப்படவுள்ளன என்பதையும் உற்றுநோக்கி-வருகிறோம்.
வனவிலங்கு கொடுமைச் சட்டத்தின்கீழ் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை உறுதிசெய்ய வேண்டும் எனவும் தங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.