சாகித்ய அகாடமி விருது பெற்றவர், கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். புதுச்சேரியில் வசித்து வரும் 98 வயதான கி.ராஜநாராயணனை புதுச்சேரியின் ஒளிப்படக் கலைஞர் மற்றும் எழுத்தாளர் இளவேனில் (எ) சங்கர் உடனிருந்து கவனித்து வருகிறார்.
இந்தநிலையில் கி.ரா. சுயநினைவுடன் எழுதிக் கொள்வதாகக் கூறி ஒரு எழுத்து படிவத்தை வெளியிட்டுள்ளார். அதில் தனது படைப்புகளுக்கான உரிமை அனைத்தையும் புதுவை இளவேனிலுக்கு எழுதி வைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது இரண்டு மன்களான திவாகரன் மற்றும் பிரபி என்கிற பிரபாகரன் ஆகியோருக்கும் அவர் உரிமையை குறிப்பிட்டு கைப்பட எழுதியுள்ளார்.
மேலும் இது தொடர்பான வீடியோ பதிவு ஒன்றிணையும் கி. ராஜநாராயணன் வெளியிட்டுள்ளார். அதில், இன்று முதல் தனது படைப்புகள் அனைத்துக்குமான உரிமை இந்த மூவரையே சாரும் என வாசகர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் அவர் தெரிவித்துள்ளார். தனது படைப்புகளை வெளியிடும் பதிப்பாளர்களும் திரைப்படமாக வெளியிடுபவர்களும் அதன் ராயல்டியை இந்த மூவருக்கும் கொடுக்க வேண்டும் எனக் கையொப்பமிட்டுள்ளார்.
இந்த மூவரும் தனது படைப்புகள் மூலம் வரும் வருவாயில் ஒரு பகுதியை "கரிசல் அறக்கட்டளை" ஒன்றைத் தொடங்கி எழுத்தாளர்களுக்கும் சிறு பத்திரிகைகளுக்கும் தனது பெயரில் பணமுடிப்பும் கூடிய விருதினை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: பதிப்புரிமை பிரச்னை... ட்ரம்பின் ட்வீட்டை நீக்கிய ட்விட்டர்!