கோவிட்-19 தொற்றின் தாக்கம் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளில் தொடர்ந்து மோசமாகிக் கொண்டே செல்கிறது. வைரஸ் பரவலை புரிந்து கொள்ளவும், வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளவும் உலகெங்கும் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் சமீபத்தில் நடத்தியுள்ள ஆய்வில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு, அறிகுறிகள் தென்படாத குழந்தைகள் மூலம் இந்தத் தொற்று அதிகம் பரவுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
”இந்தியாவில் குழந்தைகளுக்கு கரோனா தொற்றின் தாக்கம் தீவிரமாக இல்லை. இதனால் பெரும்பாலான குழந்தைகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும், இந்தத் தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளின் சுவாசப் பாதையில் அதிக அளவு கரோனா வைரஸ் உள்ளது. இதன் மூலம் மற்றவர்களுக்கு எளிதாக கரோனா பரவல் ஏற்படுகிறது” என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர ஊரடங்கு, பள்ளிகள் விடுமுறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உளவியல் ரீதியாக பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து உரிய நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும் என்றும் ஐஎம்சிஆர் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் 17 வயதுக்கு குறைவான குழந்தைகளில் வெகு சிலரே உயிரிழப்பதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 60 வயதுக்கு அதிகமானவர்கள் 51 விழுக்காடும், 45-60 வயதுடையவர்கள் 36 விழுக்காடும் 26-44 வயதுடையவர்கள் 11 விழுக்காடு நபர்களும் உயிரிழக்கின்றனர்.
அதே நேரம் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் 25 வயதுக்கு குறைவானவர்களில் ஒரு விழுக்காட்டினர் மட்டுமே உயிரிழப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தொழில்ரீதியாக வந்தால் தனிமைப்படுத்தல் தேவையில்லை - தமிழ்நாடு அரசு