உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியிலுள்ள வீர் பகதூர் சிங் கோளரங்க வானியலாளர் அமர் பால் சிங் சிறிய கிரகம் ஒன்றினால் பூமிக்கு ஆபத்துள்ளது என எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அமர் பால் சிங் கூறுகையில், “பூமிக்கு அருகில் சிறிய கிரகம் ஒன்று வருகிறது. இந்தக் கிரகம் புதன்கிழமை (29 ஏப்ரல்) பூமியிலிருந்து 3.9 மில்லியன் மைல் தொலைவில் இருக்கும். மேலும் இந்தக் கிரகம் ஒரு ராக்கெட்டை விட அதிவேகத்தில் பயணிக்கிறது.
இந்த கிரகம் தனது சுற்றுவட்டப் பாதையிலிருந்து விலகி, பூமியுடன் மோதினாலோ அல்லது வேறு எந்த கிரகத்துடன் மோதினாலோ சுனாமி அல்லது வேறு வழியில் அழிவுகள் ஏற்பட்டு பல நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும்.
1998 OR2 எனப்படும் சிறுகோள் புதன்கிழமை சுமார் 3.9 மில்லியன் மைல் தொலைவில் வருகிறது. இது சந்திரனின் தூரத்தை விட 16 மடங்கு அதிகமாகும். இந்தக் கிரகம் 1998-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் பணிபுரிந்த விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டது.
கடந்த 20 ஆண்டுகளாக புவேர்ட்டோ ரிக்கோவில் உள்ள அரேசிபோ ஆய்வகத்தில் உள்ள வானியலாளர்கள் இதனை கண்காணித்து ஆய்வு நடத்திவருகின்றனர்.
நாசாவின் கூற்றுப்படி, “இந்தச் சிறுகோள் குறைந்தது அடுத்த 200 ஆண்டுகளுக்கு எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பூமிக்கு அதன் அடுத்த நெருக்கமான அணுகுமுறை 2079 இல் நிகழும். அப்போது சந்திரனின் தூரத்தை விட நான்கு மடங்கு மட்டுமே தொலைவில் இந்தக் கிரகம் இருக்கும்.”
இருப்பினும் இந்தச் சிறுகோள் அபாயகரமான ஒரு பொருளாக (PHO) வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் இது 140 மீட்டருக்கும் பெரியது. மேலும் பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து ஐந்து மில்லியன் மைல்களுக்குள் பயணிக்கிறது.
இதையும் படிங்க: அதிவேகமாக உருகும் பனிப் படலங்கள் - 400 மில்லியன் மக்களுக்கு ஆபத்து!