அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பில் இதுவரை 17 மாவட்டங்களிலுள்ள 700க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 4 லட்சம் மக்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிலும் பார்பெடா என்கிற மாவட்டத்தில் 85 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதேபோல் தீமாஜி பகுதியில் 80ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுவரை 1843 பொதுமக்கள் 53 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் பொதுமக்கள் நிவாரண பொருட்களுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தால் அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் விடுதியின் சுவர் சரிந்து இரண்டு பெண் குழந்தைகள் இறந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, இந்த வெள்ளத்தால் 16,730 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளன. மேலும் பிரம்மபுத்திரா நதியில் தண்ணீரின் நிலை அபாயகரமான கட்டத்தை இரண்டு நாட்களில் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பேரிடர் மீட்பு படையினர் விரைந்து நிவாரண பணிகளை செய்து வருகின்றனர்.