இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் விரைவில் வரவுள்ளது என்று கூறி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுவருகின்றன. இருப்பினும் 5ஜி தொழில்நுட்பம் தற்போது இந்தியாவில் கிடைக்க வாய்ப்பில்லை என்று டெலிகாம் எக்யுப்மென்ட் அசோசியேசனின் தலைவர் பேராசிரியர் என்.கே. கோயல் ஈடிவி பாரத்திற்கு அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் என்.கே. கோயல் அளித்துள்ள சிறப்புப் பேட்டி
"நாம் தற்போது பயன்படுத்தும் வாய்ஸ் கால், வீடியோ கால், எஸ்எம்எஸ் ஆகிய சேவைகளுக்குத் தொடக்கத்தில் 2ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினோம். அதைத்தொடர்ந்து அது 3ஜி, 4ஜி தொழில்நுட்பங்களுக்கு அப்டேட் செய்யப்பட்டது. 4ஜி தொழில்நுட்பம் தற்போது அப்டேட் செய்யப்பட்டு 5ஜி சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரையில், தற்போது உலகில் எந்தவொரு பகுதியிலும் 4ஜி பயன்படுத்தப்படும் சாதனத்தில் 5ஜி சேவையைப் பயன்படுத்த முடியாது.
5ஜி சேவையில் இணைய வேகம், பாதுகாப்பு ஆகியவை அதிகமாக இருக்கும் என்றும் அதேபோல 5ஜி சேவையில் அதிக கருவிகளை இணைக்க முடியும் என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இதுபோன்ற கருவிகள் இந்தியாவில் இதுவரை விற்பனைக்கு வரவில்லை.
5ஜி தொழில்நுட்பத்தின் கவரேஜ் குறைவு என்பதால் ஒவ்வொரு 200 முதல் 300 மீட்டர்களுக்கு சிறு, சிறு டவர்கள் தேவைப்படும். அப்போதுதான் 5ஜி சேவை அனைத்து மக்களையும் சென்றடையும். 5ஜி அலைக்கற்றை இன்னும் டெலிகாம் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படவில்லை.
இந்தியாவில் முதலில் 5ஜி அலைக்கற்றை நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். அதைத்தொடர்ந்து சிறு சிறு டவர்களை அவர்கள் நிறுவ வேண்டும். பின் 5ஜி தொழில்நுட்பத்திற்கான சாதனங்கள் இந்தியாவில் கிடைக்க வேண்டும். தற்போதுள்ள தொழில்நுட்பத்தைவிட ஏதோ ஒரு வகையில் மேம்பட்டதாக இருந்தால் மட்டுமே மக்கள் 5ஜி தொழில்நுட்பத்தை நோக்கி நகர்வார்கள்.
எனவே, தற்போதுள்ள சூழ்நிலைக்கு 3ஜி அல்லது 4ஜி சேவையே போதும். இணைய வேகம் 3ஜி, 4ஜி சேவைகளில் போதுமான அளவு இருக்கிறது. தற்போது மக்களுக்கு இந்த வேகம் போதுமானது என்றே நான் கருதுகிறேன்.
இதுதவிர எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் அதிகபட்ச இணைய வேகத்தைதான் கூறுகிறார்கள். எந்த நிறுவனமும் குறைந்தபட்சம் இணைய வேகத்தை உறுதி செய்வதில்லை. பெரும்பாலான நேரங்களில் அவர்கள் கூறுவதைவிட இணைய வேகம் நமக்குக் குறைவாகவே இருக்கும்.
எனவே, மக்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்றுதான். தற்போதைய சூழ்நிலைக்கு 5ஜி தொழில்நுட்பம் குறித்து மக்கள் கவலைப்பட தேவையில்லை. 4ஜி அல்லது 3ஜி தொழில்நுட்பமே போதும் என்றே நான் கருதுகிறேன்" என்றார்.
இதையும் படிங்க: மைக்ரோசாஃப்ட்டின் அடுத்த எக்ஸ்பாக்ஸ் வெளியாகும் தேதி இதுதான்!