அருணாச்சலப்பிரதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற இருக்கிறது. இதனால் அம்மாநில அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கிவருகின்றன.
இந்நிலையில், பாஜக ஆட்சி செய்துவரும் அம்மாநிலத்தில் தற்போது அமைச்சர்களாக இருக்கும் இருவர், எம்.எல்.ஏ.க்கள் என 18 பேர் பாஜகவில் இருந்து விலகி, மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சியில் இணைந்துள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அவர்கள் அதிருப்தியில் இருந்ததாகவும், அதனால்தான் இந்த முடிவு எடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களில் மட்டும் இதுபோல சுமார் 25 முன்னணி தலைவர்கள் பாஜகவிலிருந்து விலகியுள்ள நிலையில், தற்போது கூடுதலாக 18 முக்கிய நிர்வாகிகள் விலகியிருப்பது பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.