உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் ரஞ்சன் கோகாய் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருக்கிறார். அந்த பெண் உச்ச நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றியவர் ஆவார். தலைமை நீதிபதி மீதே பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ரஞ்சன் கோகாய், ”பதவிக்காலம் முடியும்வரை பயமின்றி பணியாற்றுவேன். அடுத்த வாரத்தில் சில முக்கிய வழக்குகளை கையாள இருக்கிறேன். எனவே அதனை தடுக்கும் விதமாகத்தான் இந்த புகார் தொடுக்கப்பட்டிருப்பதாக பார்க்கிறேன்” என கூறியிருந்தார்.
இந்நிலையில், அருண் ஜெட்லி தனது ட்விட்டர் பக்கத்தில், “எந்த ஒரு நீதிபதியும் தீர்ப்பு வழங்கும்போதோ அல்லது அவரின் நீதிமன்ற செயல்பாடுகள் குறித்தோ விமர்சனங்கள் எழுவது வழக்கம். ஆனால் அதனையெல்லாம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சிறப்பான முறையில் கையாண்டுள்ளார். நீதித்துறையின் பக்கம் நிற்க வேண்டிய நேரமிது” என பதிவிட்டுள்ளார்.