டெல்லி: இந்திய இராணுவத்திற்கும் எல்லையில் உள்ள மியான்மர் ஆயுதப்படைகளுக்கும் இடையேயான மேம்பட்ட ஒத்துழைப்பைத் தொடர்ந்து நாகா போராளி அமைப்பான என்.எஸ்.சி.என் (கே) பிரிந்த பிரிவைச் சேர்ந்த சுமார் 50 கிளர்ச்சியாளர்கள் தேசிய நீரோட்டத்தில் இணைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாகா போராளி அமைப்பான என்.எஸ்.சி.என் (கே)வின் நிகி சுமி தலைமையிலான பிரிவு கடந்த சில மாதங்களாக இராணுவம், மாநில பாதுகாப்புப் படைகள் மற்றும் இராணுவ உளவுத்துறையின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாக சரணடைய முடிவு செய்துள்ளன.
இது நாகா சமாதான முன்னெடுப்புகளுக்கு ஊக்கமளிக்கும் என்றும் இராணுவ தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தோ-மியான்மர் எல்லையை நிர்வகிப்பதில் இந்திய மற்றும் மியான்மியர் படைகளுக்கு இடையிலான ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பும் ஒத்துழைப்பும் அண்மையில் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நாரவனே அண்டை நாட்டிற்கு பயணம் செய்ததைத் தொடர்ந்து மேம்பட்டுள்ளதாகவும் அந்தத் தகவல் கூறுகின்றது.
நிகி சுமி பிரிவில் 60 முதல் 65 போராளிகள் இருக்க வாய்ப்புள்ளது. மியான்மரில் தப்பிப்பிழைப்பது அவர்களுக்கு மிகவும் கடினமாகிவிட்டதால் அவர்கள் சரணடைய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் சுமி செமா முக்கிய கிளர்ச்சி தலைவர் ஆவார். இவர் நாகாலாந்தின் சுனேபூடோ மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் என்.எஸ்.சி.என் (கே) குழுவில் ஒரு முக்கிய தளபதியாக உள்ளார்.
கடந்த காலங்களில் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள கிளர்ச்சிக் குழுக்கள் மியான்மரில் தஞ்சம் அடைந்துவந்தனர். இந்த விவகாரத்தில் இந்தியா தொடர்ந்து கவலை தெரிவித்துவந்தது.
தற்போது மியான்மரில் தஞ்சமடைவதும் தடுக்கப்பட்டுள்ளது. மேலும், கிளர்ச்சி குழுக்களும் போர்குணத்தை கைவிட்டு மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாகா ஒப்பந்தம்: பிரதமரை சந்திக்க காங்கிரஸ் குழு திட்டம்