டெல்லி: ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவணே இன்று கொரியா குடியரசிற்கு மூன்று நாள் பயணம் மேற்கொள்கிறார். இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் அவர் இந்தப் பயணத்தினை மேற்கொள்கிறார். அப்போது, கொரியா குடியரசின் மூத்த ராணுவ தலைமை அலுவலர்களையும் சந்திக்கவுள்ளார்.
பின்னர், அவர் சியோலில் உள்ள தேசிய கல்லறை மற்றும் போர் நினைவுச் சின்னத்தைப் பார்வையிட்டு, மாலை அணிவிக்கவுள்ளார். தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு அமைச்சர், தென் கொரியா ராணுவத் தலைவர், கூட்டுப் படைகளின் தலைவர், பாதுகாப்பு கையகப்படுத்தல் திட்டமிடல் நிர்வாக அமைச்சர் (டாபா) ஆகியோரைச் சந்திக்க உள்ளார். அங்கு அவர் இந்தியா-கொரியா குடியரசின் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிப்பார்.
இதையடுத்து, இஞ்சே நாடு, கேங்வோன் மாகாணத்தில் உள்ள கொரியா போர் பயிற்சி மையம், டேஜியோனில் உள்ள மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அமைப்புகளையும் பார்வையிடுகிறார்.
முன்னதாக, நரவணே இம்மாத தொடக்கத்தில், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகத்திற்குப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணம் இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.
இதையும் படிங்க: காலாட்படை தினம்: தேசிய போர் நினைவிடத்தில் வீரர்களுக்கு அஞ்சலி!