நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதிக மக்கள்தொகை கொண்ட நம் நாட்டில், அசுர வேகத்தில் பரவும் கரோனா போன்ற வைரசை கட்டுப்படுத்துவது மிகவும் சவால்வாய்ந்த ஒன்று.
இதுவரை இந்தியாவில் கரோனாவால் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாட்டில் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தவும், அறிகுறி உள்ளவர்களை சோதனை செய்து வைரஸ் பாதிப்பை உறுதிசெய்யவும் போதுமான மருத்துவ உபகரணங்கள் இல்லை என்பதே நிதர்சனம்.
இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், அறிகுறி உள்ளவர்களுக்குச் சோதனை மேற்கொண்டு அவர்களை தனிமைப்படுத்த ஏதுவாகவும், நாடு முழுவதும் 51 ராணுவ மருத்துவமனைகள் அவசரகால சிகிச்சை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா, விசாகப்பட்டினம், கொச்சி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள இந்த மருவத்துமனைகளில், சிகிச்சை பெற்றுவந்த ஆயிரத்து 737 பேரில், 403 பேர் குணமடைந்துள்ளனர். இந்திய விமானப்படை மூலம், தேவையான மருத்துவ உபகரணங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.
அவசரகால மருத்துவச் சிகிச்சைக்காக 28 குழுக்கள், 21 ஹெலிகாப்டர்கள் தயார் நிலையிலும் வைக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அண்டை நாடுகளான மாலத்தீவு, இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு உதவ, ஐந்து மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ராணுவ அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: கோவிட்-19 தடுப்பு மருந்து கண்டறியும் ஆராய்ச்சியில் இந்திய மருத்துவர்கள்!