புதிய கரோனா வைரஸான கோவிட்-19 பரவுவதைத் தடுக்க, மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு முகக் கவசங்கள் வழங்க ஆந்திரா மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) முடிவெடுத்தது.
அதன்படி 16 கோடி முகக் கவசங்களை கொள்முதல் செய்ய இருக்கிறது. இந்த முகக் கசங்கள் மாநிலத்தில் நபர் ஒன்றுக்கு மூன்று வீதம் விலையில்லாமல் வழங்கப்படவுள்ளது.
மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்ற கரோனா வைரஸ் மறுஆய்வுக் கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இது குறித்து அரசு அலுவலர்கள் கூறுகையில், “மாநிலத்தில் மூன்றாம் கட்ட கணக்கெடுப்புக்குப் பிறகு 32 ஆயிரத்து 349 பேர் சோதனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மேலும் ஒன்பது ஆயிரத்து 107 பேருக்கு கோவிட்-19 வைரஸ் பரிசோதனைக்கு சுகாதார அலுவலர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி மாநிலத்தில் 417 பேருக்கு கோவிட்-19 உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில், 13 பேர் வெளிநாட்டு பயண வரலாறு கொண்டவர்கள். 12 பேர் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.
199 பேர் மார்ச் மாதம் 15 முதல் 17ஆம் தேதி வரை சமய மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். மீதமுள்ள 161 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்” என்றனர்.
இந்த மறுஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் நீலம் சாஹ்னி, டிஜிபி கௌதம் சவாங் மற்றும் சிறப்பு தலைமைச் செயலாளர் (சுகாதார) ஜவஹர் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.