கொரோனா அச்சத்தால் ஆந்திர மாநிலத்தின் நகர்ப்புற, கிராமப்புறங்களுக்கு நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தலை ஆறு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக அம்மாநில தேர்தல் ஆணையர் நேற்று அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பு வெளியான இரண்டு மணிநேரத்தில் அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, அம்மாநில ஆளுநர் பில்வாபூஷன் ஹரிசந்திரனை சந்தித்துப் பேசினார். தேர்தல் ஆணையரின் இந்த தன்னிச்சையான முடிவுக்கு ஜெகன் தனது கண்டனத்தைத் தெரிவித்தார்.
இதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சித்தூர், குண்டூர் மாவட்ட ஆட்சியாளர்கள், திருப்பதியின் காவல் கண்காணிப்பாளரை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அலுவலர்களை இடமாற்றம் செய்வதற்கான அதிகாரத்தை மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு யார் கொடுத்தது? பின் எதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கிறது" எனக் கோபமாக தெரிவித்தார்.
மாநில தேர்தல் ஆணையரை தாங்கள் நியமிக்கவில்லை எனத் தெரிவித்த ஜெகன் மோகன், சந்திர பாபு நாயுடு தனது சாதியைச் சேர்ந்த ரமேஷ் குமாரை தேர்தல் ஆணையராக நியமித்தார் என்றும் அவர் பாகுபாடுடன் செயல்படுகிறார் என்றும் குற்றஞ்சாட்டினார்.
ஆந்திர மாநிலத்தின் தலைமைச் செயலர் நிலம் சாவ்னி இன்று மாநிலத் தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைத்த உத்தரவைத் திரும்பப்பெற வேண்டும் என்றும் முன்பு அறிவித்த தேதிகளில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நமஸ்தேக்கு 'யெஸ்' கை குலுக்குவதற்கு 'நோ' - விழிப்புணர்வு மணல் கைவண்ணம்!