உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும்விதமாக இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பல்வேறு தொழில்கள் முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் ஒரு நபருக்கு மூன்று முகக்கவசம் என்பதன் அடிப்படையில் 16 கோடி முகக்கவசங்களைத் தயாரிக்கும் பணியில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது.
இதற்கான பணியினை, நகராட்சிப் பகுதிகளில் வறுமையை ஒழிக்கும் திட்டத்தின் வாயிலாகச் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கியுள்ளது. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள 40 ஆயிரம் பெண்கள் மாநில அரசின் இந்த முயற்சியின் காரணமாக ஊரடங்கில் நாளொன்றுக்கு ஐநூறு ரூபாய் வருவாய் ஈட்டுகின்றனர்.
முகக் கவசம் தயாரிப்பதற்கான துணிகளும் கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்திலிருந்தே பெறப்படுகின்றது எனவும், தோராயமாக, 16 கோடி முகக்கவசங்கள் தயாரிக்க 1.50 கோடி மீட்டர் துணியைப் பயன்படுத்தவுள்ளதாகவும் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது 20 லட்சம் மீட்டர் துணியில் முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டுவருவதாகவும், தொடர்ந்து நான்கு முதல் ஐந்து நாள்களில் ஒரு நாளுக்கான முகக்கவச உற்பத்தியை 30 லட்சமாக உயர்த்த திட்டமிட்டிருப்பதாகவும், தயாரிக்கப்பட்ட முகக் கவசங்கள் முதற்கட்டமாக கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் கூறினர்.
இதையும் படிங்க: முகக் கவசம் - எவ்வாறு கையாள வேண்டும் என விளக்குகிறார் மருத்துவர் வெங்கடேஷ்