ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மார்ச் 21ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருந்தது. இதனிடையே கரோனா வைரஸ் காரணமாக உள்ளாட்சித் தேர்தல் ஆறு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில், உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும் என மனுதாக்கல் செய்தது. ஆனால் மாநில தேர்தல் ஆணைய விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், அம்மாநில தேர்தல் ஆணையர் ரமேஷ் குமார் மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், ''மாநிலத்தில் உள்ள அலுவலர்களை வேறு இடங்களுக்கு மாற்றுவது நடுநிலையுடன் தேர்தலை நடத்துவதற்காகதான். ஆனால் மாநில அரசு தேர்தல் ஆணையம் கூறுவதை ஏற்க மறுக்கிறது.
எனக்கும், எனது குடும்பத்தினரின் உயிருக்கும் தொடர்ந்து அச்சுறுத்தல் வருகிறது. இதனால் எனக்கு மத்திய அரசிடமும், உள்துறை அமைச்சகமிடமும் பாதுகாப்பு கேட்பதைத் தவிர வேறு வழியில்லை'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடக்குமா? - அஞ்சும் தெலுங்கு தேசம்