லடாக் பகுதியிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கிடையே நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, இந்திய-சீன தாக்குதலின்போது காயமடைந்த ராணுவ வீரரின் தந்தை, ஆயுதமின்றி வீரர்கள் போரிட்டதாலே இத்தகைய உயிரிழப்புகள் ஏற்பட்டதாகக் கூறி வருத்தமடைந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து ராகுல் காந்திக்குப் பதிலளித்த ராணுவ வீரரின் தந்தை, ”ராகுல் காந்தி இந்திய-சீன தாக்குதலில் உயிரிழந்தவர்களைக் கொண்டு அரசியல் செய்ய வேண்டாம். இந்திய ராணுவம் மிகுந்த பலம் வாய்ந்தது. அது நிச்சயம் சீனாவை வெற்றி கொள்ளும். என் மகன் இந்திய ராணுவத்திற்காகப் போரிட்டான். இனியும் இந்திய ராணுவத்திற்காகப் போரிடுவான்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், ராணுவ வீரரின் தந்தையின் கருத்துக்களை மேற்கோள் காட்டி உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்வீட் செய்துள்ளார். அதில், ”துணிச்சலான ராணுவ வீரரின் தந்தை ராகுல் காந்திக்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளார். மொத்த நாடும் ஒருமித்த கருத்துடன் பயணித்துக் கொண்டிருக்கையில், நீங்கள் வெற்று அரசியலை திணிக்காதீர்கள். இந்த இக்கட்டான சூழலில் நாட்டின் நலனிற்காக ராகுல் காந்தி அரசுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.