ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் நாட்டையே திரும்பி பார்க்கவைத்துள்ளது. நாடு தழுவிய அளவில் ஒரு உள்ளாட்சி தேர்தலுக்கு இவ்வளவு பரபரப்பு ஏற்பட்டிருப்பது இதுதான் முதல்முறை. துபாக் சட்டப்பேரவை இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, பாஜகவினர் தங்களின் பார்வையை தெலங்கானாவுக்கு திருப்பியுள்ளனர்.
ஏற்கனவே, மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, பிரகாஷ் ஜவடேகர், பாஜக தேசிய தலைவர் நட்டா, கட்சியின் இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் ஹைதராபாத்தில் பரப்புரையில் ஈடுபட்டனர். இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று சாலை பரப்புரையில் ஈடுபடவுள்ளார்.
பெகும்பெட் விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, பாக்கியலட்சுமி கோயிலுக்கு சென்ற அவர் வழிபாட்டில் ஈடுபட்டார். பின்னர், செகந்திராபாத்தில் அவர் சாலை பரப்புரையில் ஈடுபடவுள்ளார். ஓவைசியின் கோட்டையாக கருதப்படும் ஹைதராபாத்தில் வெறுப்புணர்வை பரப்பும் விதமாக பாஜக தலைவர்கள் செயல்பட்டுவருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
வரும் டிசம்பர் 1ஆம் தேதி, 150 வார்டுகளை கொண்ட ஹைதராபாத் மாநகராட்சிக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. கடந்த தேர்தலில், 99 வார்டுகளை தெலங்கானா ராஷ்டிரிய சமிதியும் 44 வார்டுகளை ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.