நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் கிடைத்துவிட்டதால் அந்த மசோதா தற்போது சட்டமாகியுள்ளது.
இத்தருணத்தில், நேற்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் அமித் ஷா கலந்துகொண்டு பேசினார். அப்போது, ' மேகாலயா மாநில முதலமைச்சர் கொனார்டு சங்மாவும், அவரது அமைச்சர்களும் டிசம்பர் 13 அன்று என்னைச் சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து எடுத்துக்கூறினர்.
இதன் மூலம் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அவர்களுக்குப் புரியவைக்க முயன்றேன். சட்டத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். நான் அவர்களைக் கிறிஸ்துமஸ் முடிந்ததும் சந்திப்பதாகக் கூறியிருக்கிறேன்" என்றார். மேலும், 'ஆக்கப்பூர்வமான விவாதத்தின் வழியாக இந்த விவகாரத்தில் மேகாலயாவின் பிரச்னைகளைத் தீர்க்கலாம்' என உறுதி அளித்திருப்பதாகவும் அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.