இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த மே மாதம் முதல் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலுக்குப் பின், எல்லையில் போர் பதற்றமும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்கும் வகையில் ஐந்து அம்சத் திட்டத்திற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன, இருப்பினும், பேச்சுவார்த்தைகளுக்குப் பின் வீரர்களை திரும்பப் பெற சில வாரங்கள், ஏன் சில மாதங்கள் வரைகூட ஆகலாம் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இதன் காரணமாக வரவிருக்கும் குளிர்காலத்தில் வீரர்கள் தாக்குப்பிடிக்க ஏதுவாக இரு நாடுகளும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, இந்திய ராணுவம் வெப்பமூட்டும் கருவிகள், உணவுப் பொருள்கள், எரிபொருள்கள் ஆகியவற்றை எல்லைக்கு எடுத்துச் செல்லும் பணிகளை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
காஷ்மீர் எல்லைப் பகுதியில் குளிர் காலங்களில் வெப்பநிலை ஜீரோ டிகிரிக்கு கீழ் செல்லும் என்பதால், அதற்கு ஏற்றால்போல கூடாரங்களை ஏற்படுத்தத் தேவையான உபகரணங்களையும் இந்திய ராணுவம் எல்லைக்கு எடுத்துச் சென்று வருகிறது,
இது குறித்து மேஜர் ஜெனரல் அரவிந்த் கபூர் கூறுகையில், "முழு லடாக் பகுதியும் மணாலி-லே, ஜம்மு-ஸ்ரீநகர்-லே ஆகிய இரண்டு முக்கிய நெடுஞ்சாலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இவை குளிர்காலங்களில் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வரை மூடப்படும்.
ஆனால் கடந்த சில மாதங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக இவ்வாறு மூடப்படும் நாள்கள் 120ஆகக் குறைந்துள்ளது. வரும் நாள்களில், அடல் சுரங்கப்பாதையையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்"என்றார்.
இந்திய ராணுவத்தைப் போலவே சீன ராணுவமும் எல்லையில் தனது வீரர்களுக்குத் தேவையான பொருள்களை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சீன எல்லை பிரச்னை எதிரொலி - உஷார் நிலையில் உத்தரகாண்ட்