குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள தோர்டோ பகுதிக்குச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, சுத்திகரிப்பு ஆலை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா, தானியங்கி பால் பதப்படுத்தும் ஆலை உள்ளிட்ட வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த முக்கிய நிகழ்வுக்கு முன்னர், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தின் சீக்கிய விவசாயிகளுடன் கலந்துரையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குஜராத் மாநில அரசின் தகவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கிவைக்க குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். அப்போது, கட்ச் மாவட்டத்தின் சீக்கிய விவசாயிகளுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார்.
இதற்காக, இந்தோ-பாக் எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளில் குடியேறிய சீக்கிய விவசாயிகள் குழு, பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த அழைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோராயமான மதிப்பீட்டின்படி, கட்ச் மாவட்டத்தின் லக்பத் தாலுகாவிலும் அதைச் சுற்றியும் சுமார் 5,000 சீக்கிய குடும்பங்கள் வசிக்கின்றன.
மத்திய அரசால் அண்மையில் கொண்டுவரப்பட்ட வேளாண் தொடர்பான மூன்று சட்டங்கள், விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ,விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் சட்டம், 2020 , விவசாயிகள் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம், 2020, அத்தியாவசிய பொருள்கள் (திருத்த) சட்டம் 2020. ஆகியவற்றை எதிர்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
குறிப்பாக டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் முற்றுகையிட்டு 18 நாள்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
விவசாயிகள் போரட்டம் நீடித்துவருகிறது. விவசாயிகளிடம் மத்திய அரசிடம் மேற்கொண்ட ஆறுகட்ட பேச்சுவார்த்தையிலும் தீர்வு காணப்படவில்லை. இந்நிலையில், சீக்கிய விவசாயிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இதையும் படிங்க: வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர்!